Saturday, 20 September 2008

கடனைப் பொது உடமையாக்கி இலாபத்தைத் தனி உடமையாக்கிய விந்தை.



Copyright © Steve Bell 2008, நன்றி:Steve Bell
The Guardian, Tuesday September 9 2008


அண்மைய நாட்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிதி நிறுவனங்கள் பலத்த சரிவை அடைந்துள்ளன.மீள அறவிடமுடியாக் கடன்களை 'பொதி' பண்ணி உலகம் முழுக்க முதலீடுகளாக விற்ற மோசடி அம்பலம் ஆனதை அடுத்து அமெரிக்க நிதி முகாமைத்துவ நிறுவனங்கள் மீதான நம்பிக்கை என்பது ஆதாள பாதாளாத்தை தொட்டு விட்டது.இப்போது தான் விழித்துக் கொண்டதைப் போல் அரசு இந்த மோசடியான கடன்களைப் பொறுபேற்கின்றதாம்.




எவனோ விற்று இலாபம் ஈட்டிய பின் ,அறவிட முடியாக் கடன் சுமையை மட்டும் பொது உடமை ஆக்கி இருக்கிறது அமெரிக்க அரசு.இந்தச் சுமையை இனிச் சுமக்கப்போகிறவர்கள் சாதாரண அமெரிக்கக் குடி மக்களும் அமெரிக்க தேசத்தால் சுரண்டப் பட்டுக்கொண்டிருக்கும் இனிச் சுரண்டப்பட இருக்கும் தேசங்களிலும் வாழும் மக்களே.இவ்வாறு அமெரிக்க அரசால் பொது உடமை ஆக்கப்பட இருக்கும் கடன் முறிகள் றிலியன் டொலர்களாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.




பெருத்த இலாபத்தை அடைந்த வங்கியாளர்களோ நிதி முகாமையாளர்களோ அல்லது அமெரிக்க அரசில் வீற்றிருக்கின்ற முன்ளாள் முகாமையாளர்களோ இதனால் பாதிக்கப் படப் போவதில்லை.ஈட்டிய தமது இலாபத்தை அவர்கள் வேறு பத்திரமான இடங்களில் இட்டு வைத்திருப்பார்கள்.




வேடிக்கை என்ன வெனில் மூன்றாம் உலக நாடுகளில் போதிய இலாபம் ஈட்டும் அரச உடமையாக இருக்கும் தேசிய நிறுவனங்களை தனியார் மயப்படுத்தச் சொல்லும் அரசே நட்டமடைந்த தனியார் நிறுவனங்களை அரசுடமையாக்கி நிதி முகாமையாளர்களைப் பாதுகாக்கிறது.இதன் இன்னொரு நோக்கம் சீனா டுபாய் போன்ற நாடுகள் இந்த நிதி நிறுவனங்களை வாங்கி விடாமல் தடுப்பது.சுயாதி பத்திய நிதி மூலங்களைக் கொண்டு சீன டுபாய் போன்ற நாடுகள் உலக நிதி முகாமைதுவத்தைத் தமது கைக்குள் கொண்டு வந்து விடும் என்னும் பயம் இப்போது மேற்குலகைத் தொற்றிக் கொண்டுள்ளது.




உடனடி நெருக்கடிகளைச் சாமாளிப்பதற்காக கடன்களை அரசுடமையாக்கினாலும் அமெரிக்க அரசின் துண்டு விழும் தொகையானது மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டு செல்லும்.கடன்களிற்கான வட்டி அதிகரிக்கும்,விலைவாசி ஏறும் டொலரின் பெறுமதி குறையும்.


இவை அனைத்தும் சேர்ந்து இனி வரும் காலத்தில் மேலும் மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும்.இவற்றில் இருந்து மக்களைத் திசை திருப்ப மேலும் மேலும் உலகளாவிய பயங்கரவாதாப் பூச்சாண்டி காட்டி பல யுத்தங்களைச் செய்ய வேண்டி இருக்கும்.அதற்கான நிதி மூலங்களுக்காக மேலும் மேலும் கடன் பட வேண்டி இருக்கும்.அமெரிக்க மக்கள் இனிப் பொறுத்து போதும் என்று பொங்கி எழுந்தால் அமெரிக்க அரசு ஆட்டங்காணும்.


மொத்ததில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் சீன இராணுவ பொருளாதார எழுச்சியும் புதிய வல்லாதிக்கச் சமன் பாட்டையும் ஒரு புதிய உலக ஒழுங்கையும் தீர்மானிக்கும் காலத்தின் ஆரம்பப் புள்ளியில் உலகம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

4 comments:

ஆட்காட்டி said...

அதி விரைவில் ஒரு யுத்ததை எதிர்பார்க்கிறோமுங்கோ.

Anonymous said...

அப்பு இப்பதான்டி ஒரு கட்டுரை நியாயமாக எழுதியிருக்கிறீர்!கொஞ்சம் விரிவாக எழுதினால் மார்க்சை அண்மித்துவிடுவாய்.

அற்புதன் said...
This post has been removed by the author.
அற்புதன் said...

ஆட்காட்டி ,

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

அனாமதேய அண்ணை,

நீங்கள் உங்கட பேரைத் துணிவா எழுதி இருந்தியல் எண்டா மாக்சை அண்மித்து கட்டுரை வரைவது எப்படி எண்டு உங்கட்ட வந்து படிச்சிருக்கலாம். நீங்கள் மாக்சுக்கும் வகுப்பு எடுத்தனியளே?