
.jpg)
ஆமிக்காரர் பதின்மூண்டு பேர் திரு நெல்வேலியில சரியாம்.கொஸ்டலில எல்லோரிண்ட முகத்திலும் பெருமிதம் கலந்த புன் சிரிப்பு.டவுனுக்க பொலிஸ் ஆமி எல்லாம் கோட்டைக்குள்ள போயிட்டாங்கள்.சனம் சைக்கிளில திருனல்வேலிக் கெம்பஸ் பக்கம் அலை அலையா கண்ணி வெடி வெடிச்ச இடைத்தைப் பாக்கப் போகுது.இண்டைக்கும் நாபகம் இருக்குது தெரு ஓரத்தில மூண்று சின்ன துவாரங்கள் அதுக்குப் பக்கத்தில ஒரு பெரிய குழி, உந்தக் கடைக்கு மேல நிண்டு தான் சுட்டவையாம் எண்டு ஒரு பூட்டி இருக்கிற கடையக் காட்டினார் அண்ணர்.அதுக்கு மேல பின்னால வளவுக்கு இருக்கிற மாமரத்திண்ட கொப்புக்கள் அடர்த்தியா இருந்திச்சுது.உரு மறைக்க வசதியான இடம்.செல்லக் கிளி தலமையில தான் தாக்குதல் நடந்ததாம் எண்டு ஊரெல்லாம் கதை.
இனி என்ன நடக்கும் எண்டு ஒருத்தருக்கும் தெரியாது.அரசாங்கம் ஊரடக்கு அறிவிச்சு இருக்காம்,வழக்கமா நடக்கிற மாதிரி ஆமிக்காரர் டவுனுக்க கடையள எரிப்பாங்களோ ஆக்களை கைது செய்வாங்களோ தெரியாது.சனம் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்க கடை கடையா சைக்கிளில திரியுது.
கொழும்பில கலவராமாம் ஊரடங்காம் எண்டு கதை அடிபட்டிச்சு.அனுராதபுரம் தாண்டி ஒரு பஸ்சோ யாழ் தேவியோ ஓடேல்ல.தொலைபேசியள் ஒண்டும் வேலை செய்யேல்ல.ரேடியோவியேயும் தொலைக் காட்சியிலும் ஜே ஆர் தோன்றி யுத்தம் என்றால் யுத்தம் என்று சொல்லுறார்.ஜே ஆர் இப்ப இல்ல ஆனா யுத்தம் தொடருது.பாடசாலை எல்லாத்தையும் மூடியாச்சு கொஸ்டலில் இருந்தவை எல்லோரையும் போகச் சொல்லி ஆச்சு.கொழும்பில இருந்த வீட்டாருக்கு என்ன நடந்தது எண்டு தெரியாது.
ரேடியோவுக்குப் பக்கத்தில் நிண்டு தமிழோசையும் ஆகாசவாணியையும் கேட்டுத் தான் கொழும்பில என்ன நடக்குது எண்டு தெரிய வந்திச்சு.ஒவ்வொரு வருசமும் நடக்கிற மாதிரி வழக்கம் போல வீடுகளை கொள்ளை அடிச்சுப் போட்டுப் போவாங்கள் எண்டு தான் எல்லோரும் நம்பினம்.ஆனா நடந்ததோ வேற வெலிக்கடையில கைதிகள் படுகொலை எண்டு ஆகாசவாணி சொல்லிச்சு ஆனா இலங்கை வானொலி கைதிகளுக்கு இடையே நடந்த கைகலப்பில் கைதிகள் மரணம் எண்டு பொய் சொல்லிச்சு.
.jpg)
ஐன்ச்சு நாளைக்குப் பிறகு முழுக் குடும்ப்பத்தாரும் உறவினர்களும் அகதிகளாக முகாமில் இருப்பதாகவும் அவர்கள் யாழ்ப்பாணம் வரும் சரக்குக் கப்பலில் வர இருப்பதாகவும் தகவல் வந்தது.
காங்கேசன் துறையில இருந்து டவுனுக்க வந்த பஸ்ஸில உடுத்த உடுப்போட வந்து இறங்கினார்கள்.கிழிந்த உடைகளுடன் நாட்கணக்காக குழிக்காமால் சரக்குக் கப்பலில் மூன்று நாட்களாகப் பயணம் செய்து உயிருடன் வந்திருந்தார்கள்.எல்லோரும் வந்தவர்களைக் கட்டி அணைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.யாழ் மண்ணில் காலெடி வைத்தது தமக்கு பெரும் பாக்கியம் என்றார்கள் தமக்கு நடந்தவற்றை கதை கதையாகாச் சொன்னார்கள்.காங்கேசன் துறையில் இறங்கியவுடன் தம்மை அன்பாக அரவணைத்துக் கவனித்த இளையவர்கள் பற்றி பெருமிதமாகச் சொன்னார்கள்.மீள கொழும்பு செல்வதில்லை என்று சொன்னார்கள்.
அதி காலை பாடசலைக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருக்கும் போது கனத்தை இருந்த பொரளைப் பக்கமாக இருக்கும் தமிழரின் கடைகள் எரியூட்டப்படுவதாக தொலை பேசி அழைப்பு வருகிறது.என்ன செய்வது என்று யோசனையாம்.தெருவில் வழக்கமாக வெசாக் லிஸ்ட்டைக் கொண்டு வந்து தமிழர்களிடம் மிரட்டிக் காசு பறிக்கும் தெருச் சண்டியர்கள் கூடுவது போல் இருந்ததாம்.அரு, அருகா இருந்த தமிழ்க் குடும்பங்கள் எல்லோரும் ஒன்றாக மதிற் சுவரின் மேல் ஏறி பின்னால் கட்ட்ப் பட்டுக் கொண்டிருக்கும் காலி வீடுகளில் பதுங்குகிறார்கள்.
சிறிலங்கா அரசின் வாக்களார் தேர்தல் அட்டவணையுடன் வந்த ஒரு கூட்டம் தமிழர் வீடுகளை அடையாளம் காட்ட உள்ளூர் தெருச் சண்டியர்கள் வீடுகளை கொள்ளை அடித்து விட்டு எரியூட்டுகின்றனர்.கொழும்பில் தமிழர் வாழ் விடங்கள் கடைகள் எல்லாம் இவ்வாறு எருயூட்டப்படுகின்றன.தமிழ்த் தேசிய இன எழுச்சி என்னும் பெரும் தீயைத் தான் தாம் பற்ற வைப்பத்தை ஜே ஆரோ சிறில் மதியுவோ அன்று உணரவில்லை.இன்றும் அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
குழந்தை குட்டிகளுடன் தமிழர்கள் கொழும்பு எங்கும் அகதிகள் ஆக்கப்பட்டு ஓர் நாளில் எதுவும் அற்ற எதிலிகளாக தாம் தேடிய அனைத்தையும் இழந்து பாடசாலைகளில் கையேந்தி உணவு உண்ணும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.எந்தக் குற்றத்தையும் செய்யாதவர்களை இந்தப் பொதுத் தண்டிப்பே நாம் தமிழர்கள் என்னும் தேசிய உணர்வு உள்ளவர்களாக உரு மாற்றியது.அன்றைய வெள்ளிக் கிழமை கொழும்பிற்குள் புலிகள் வந்து விட்டார்கள் என்னும் வதந்தியைக் கிளப்பி விட்டு அகதி முகாமில் இருந்த்து வீடு பார்கச் சென்ற தமிழர்களைக் கொன்று குவித்தார்கள்.தெருவெங்கும் தமிழரின் பிண வாடை.
இந்தப் பொதுமையான வலியே இன்றும் எம்மை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எமது தாய் நாட்டுடன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் பிணைக்கும் சங்கிலியாக இருக்கிறது.சிங்களப் பேரினவாதம் மூட்டிய கறுப்புத் தீ இன்னும் இன்னும் கொழுந்து விட்டு எரியட்டும்.கொழுந்து விட்டெரியும் தீயில் கருகிச் சாம்பலாகியே சிங்களப் பேரினவாதம் பரி நிர்வாணம் அடையும்.அதுவரை எம் சிறு தீவில் எவருக்கும் விமோசனம் இல்லை.
(படங்களுக்கு நன்றி நிதர்சனம்.கொம் மற்றும் தமிழ் நேசன்.கொம்)


0 comments:
Post a Comment