
சோழருடைய படைகளுக்கும் சிங்களவர் படைகளுக்குமிடையில் ஏற்பட்ட முதலாவது நேரடிப் போர் 915 அளவில் நடை பெற்றது.அப் போர் வெள்ளூரில் நடை பெற்றது.முதலாம் பராந்தக சோழன் பாண்டிய அரசைக் கைப்பற்ற முயன்ற போது ,பாண்டிய மன்னன் ராஜசிம்மனுக்கு உதவியாக அனுராதபுரத்து மன்னன் ஐந்தாம் கஸ்ஸப (913-923) என்பான் தன் படைகளை அனுப்பி வைத்தான்.வெள்ளுரில் பாண்டியர் படையும் சிங்களவர் படையும் சோழர் படைகளால் வெற்றி கொள்ளப்பட்டன.
வெள்ளூரில் நட்டை பெற்ற பெரும் போர் பற்றிச் சோழர் கல்வெட்டுக்களும் இலங்கையின் பாளி வரலாற்றேடான சூளவங்ஸ நூலும் தகவல் தருகின்றன.சிங்கள மன்னன் அனுப்பிய படை தமிழ் நாட்டில் அடைந்த தோல்வியைச் சூளவங்ஸ ஒரு தோல்வியாகக் கூறவில்லை.பாண்டிய மன்னர் வேண்டுகோளின் படி அனுப்பப் பட்ட படையினர் நோய் வாய்ப்பட்டுப் பெருந்தொகையாக இறந்த காரணனத்தால் சிங்கள மன்னன் தனது படையை இலங்கைக்குத் திருப்பி அழைத்தான் என்றே பாளி நூல் விளக்கம் கொடுத்துள்ளது.
இதற்கு மாறாக தமிழ் நாட்டில் கிடைக்கும் கல்வெட்டுச் சான்றின் படி சிங்கள மன்னன் அனுப்பிய வலிமை வாய்ந்த பெரும் படை பாண்டிய ராஜசிம்மனுடைய படைகளுடன் கூடிப் பராந்தக சோழன் படைகளைத் தாக்கின என்றும், வெள்ளூரில் நடை பெற்ற கடுமையான போரில் படு தோல்வி அடைந்தன என்றும் அறியக் கிடக்கின்றது.இந்த வெற்றிக்குப் பின்னர் பராந்தகசோழன் 'மதுரையும் ஈழமும் கொண்ட ' என்ற விருதைப் பெற்றான்.
(இலங்கையில் தமிழர் ஓர் இனக் குழு ஆக்கம் பெற்ற வரலாறு - கா.இந்திரபாலா -பக்கம் 260-261)


0 comments:
Post a Comment