முதலாவது தலித் மாநாட்டில் இராகவனால் முன்வைக்கப்பட்ட தலித்தியம் எதிர் தேசியம் , மற்றும் தேசியமென்பது கற்பிதம் என்னும் முன் மொழிவுக்கு சோபாசக்தி எந்தப் பதிலையும் இதுவரை வழங்காத நிலையிலும் , தலித் முன்னணி நடாத்துகின்ற இரண்டாவது மாநாட்டுக்கும் சோபாசக்தி தயவு செய்து வாருங்கோ, எங்களிட்ட உந்த புலி எதிர்ப்பு = தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியலைத் தவிர தலிதுக்களுக்கான வேறு எந்த அரசியல் வேலைத் திட்டமும் இல்லை என்று பகிரங்கமாகத் தெரிவுத்துள்ள நிலையில், இந்த தலித் முன்னணியினதும் அதன் செயற்பாடுகள் , கருத்து நிலைகள் மீதான எதிர்வினை என்பது எல்லாப் பக்கங்களிலும் இன்று உணரப் பட்டுள்ளது.
தேசம் நெற்ரில் இரவி என்பவர் எழுதி உள்ள கருத்துக்கள், எனது முன்னைய பதிவில் இராகவனையும் சோபாசக்தியையும் நோக்கி என்னால் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் நேர்த்தியாக எழுதப்பட்ட பின் நோட்டமாக இருப்பதால் இங்கே படி எடுத்துப் போடப்படுகிறது.
// ravi on February 15, 2008 8:13 pm
தேசியம் ஒரு கற்பிதம் என்பதில் கற்பிதம் என்பது மாயை என்றதான மொழிப்படுத்தல் இந்தக் கூற்றை எதிர்ப்பவர்களிடம் மட்டுமில்லை இதை ஆதரிப்பவர்களிடமும் தான் (புகலிடத்தில்) இருக்கிறது. இந்த எளிய புரிதலை வைத்தேதான் முதலாவது தலித் மாநாட்டிலும் தேசியத்தை நிராகரிக்கும் பாணிகளும் பாவனைகளும் இருந்தன. தலித்தியம் தேசியத்துக்கு எதிரானதா இல்லையா என்ற கேள்விக்கு அங்கு விடையளிக்கும் முக்கியம் இல்லாமலிருந்தது அல்லது தட்டிக்கழிக்கப்பட்டது.
தேசியம் என்ற பெருங்கதையாடலுக்குள் ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும் தந்திரமாக இணைக்கப்பட்டு விடுகிறார்கள்… ஒடுக்குமுறையை சகித்துக்கொள்ள வைக்கப்படுகிறார்கள் என்றால் தலித் என்ற கருத்தாக்கம் எப்படி பெருங்கதையாடலாக இல்லாமல் போய்விடும். சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டிருக்கும் சாதிகளுக்குள்ளே நிகழ்த்தப்படும் படிநிலை ஒடுக்குமுறைகளை சகித்துக்கொண்டு இருக்கும்படி தலித்தியம் என்ற பெருங்கதையாடல் கோருகிறது என விவாதிக்கும் ஒருவருக்கு என்ன விடை கிடைக்கப்போகிறது. புறநிலையிலிருந்து நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை வடிவங்களாக பார்ப்பனியத்தையும் வேளாளியத்தையும் அடையாளம் கண்டதால்தான் ஒடுக்கப்பட்ட சாதிகள் தலித் என்ற அடையாளத்துள் வருகின்றன. இந்த பார்ப்பனியம் அல்லது வேளாளியம் நிகழ்த்தும் ஒடுக்குமுறையால்தான் தலித்தியம் உருப்பெறுகிறது. எனவே தலித்தியமும் ஒரு கற்பிதம்தான்.
கற்பிதம் என்ற சொல்லுக்கு தமிழகராதியில் விளக்கம் எடுத்து தலித்தியத்தை எப்படி நிராகரிக்க முடியாதோ அதேபோன்றுதான் தேசியத்தையும் நிராகரிக்க முடியாது. வேண்டுமானால் சிங்களப் பேரினவாதம் செயற்படுவதை மறுக்கும் ஒருவர் தமிழ்த் தேசியத்தை நிராகரிப்பதை புரிந்துகொள்ள முடியும். அல்லது மறுதலையாக சிங்களப் பேரினவாதத்தை தமிழ்த் தேசியம் தான் கட்டமைத்தது என்று மறுத்தான் கொடுத்து தமிழ்த்தேசியத்தை நிராகரிக்க முடியும்.
தமிழர் என்ற இன அடையாளத்துள் வைத்து நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்கொள்வதில் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் தேவையை எப்படி நிராகரிப்பது? நிறப்பிரிகை விவாதங்களின்போது தேசியம் ஒரு கற்பிதம் என்பதை மறுத்த கல்யாணி பின்னர் “ஆழமாக யோசித்தால் சரியானதாகத்தான் இருக்கிறது” என்று ஏற்றுக் கொண்டாலும் “தேசிய இன அடிப்படையிலான ஒடுக்குமுறை கற்பிதம் இல்லையே, அது யதார்த்தமாதகத்தானே இருக்கிறது” என்கிறார். நிறப்பிரிகை எழுப்பி தொடர்ந்த இந்த விவாதம் பல பரிமாணங்களில் சிந்திக்கும் கதவுகளைத் திறந்தது. ஆனால் அது முடிவுகளை அறிவித்ததாக நான் புரிந்துகொள்ளவில்லை.
தேசியம் ஒரு கற்பிதம் என்பதும் தேசியம் ஒரு காலகட்டத்தின் தேவை என்பதும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களல்ல என்றது நிறப்பிரிகை.
“தேசியம் ஒரு கற்பிதம் என்பது ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மறுப்பதென்பதாகாது. ஈழத்தில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது சிங்களப் பேரினவாதம் என்ற கட்டமைப்பின் / கற்பிதத்தின் விளைபொருள். இதற்கெதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் தவிர்க்க இயலாததது” என்று சொன்ன நிறப்பிரிகை, இந்தப் போராட்டம் விடுதலைபெறும் அனைத்து மக்களுக்கும் உரிமையை வழங்குவதாக இருக்க வேண்டும் என்ற வகையில் தேசியத்தை கற்பிதம் செய்ய வேண்டும் என்று விவாதத்தை முன்வைத்தது.
புலிகளின் தேசியத்தை தமிழ்த் தேசியமாகக் கருதுபவர்களும் புலியெதிர்ப்பியலாளர்களும் தமது ஆயுதமாக இந்தக் கோட்பாட்டை முன்மொழிவது அவர்களின் தேவைகருதியதுதானே யொழிய ஒன்றும் விவாதப் பண்புகொண்டதல்ல.
இன்னொருவகையில் இது ஒன்றும் புதிதான முன்மொழிவுகளுமல்ல. 80 களில் தோன்றிய இயக்கங்களும் பெண்விடுதலை தலித் விடுதலை என்பவற்றை தேசியவிடுதலைப் போராட்டம் உள்ளடக்க வேண்டும் என்று சொன்னவைதான். அதை அடையும் வழிமுறைகள் அதற்கான விவாத முறைகளெல்லாம் புதிய புரிதல்களையோ பரிமாணங்களையோ தரவில்லை. சோவியத் யூனியனையும் சீனாவையும் முன்வைத்து அதன் சமூக இயக்கங்களை புகழ்ந்து தருவதிலேயே தவழ்ந்து திரிந்தன. எனவே அதன் வழிமுறைகளை அடைவதற்கான விவாதக்களங்களில் வைத்து தேசியம் கற்பிதம் செய்யப்படவில்லை என்று சொல்லலாம்.
தேசியம் ஒரு கற்பிதம் என்ற கோட்பாட்டை தேசியத்தை நிராகரிப்பதானதாக மாற்றிய வித்தகம் புகலிடத்தில் இடைக்காலகட்டங்களில் காணாமல்போய் மீண்டும் முளைத்தவர்களுக்கே பெரும்பாலும் வாய்க்கப் பெற்றிருக்கிறது. இது தலித்தியம் பெண்ணியம் முஸ்லிம் இனம்மீதான தமிழ்ப்பேரினவாத ஒழிப்பு என்பதை உள்ளடக்கும் தேசியத்தைக் கோருவதற்குப் பதில் இவைகளை தேசியத்துக்கு எதிரானதாக வைத்துவிட்டிருக்கிறது.
இதற்குள்தான் தலித் மேம்பாட்டு முன்னணியின் தலித்திய மாநாடு அகப்பட்டிருக்கிறது. எல்லா விடுதலைக்கும் தலித் விடுதலைதான் முன்நிபந்தனை என்பதை இதற்கு வெளியில் வைத்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதையே -சாதிப் படிநிலையில் கீழடுக்கில் நிறுத்தப்படுபவர்களிலிருந்து பார்ப்பனரின் வாசல் படிவரை, பெண்ணியத்தை எதிர்ப்பவரிலிருந்து பெண்ணியத்துக்காக குரல்கொடுக்கும் ஆணாதிக்கவாதிகள் வரை பற்றிப் படர்ந்திருக்கும் ஒடுக்குமுறைக்கெதிரான- பெண்விடுதலைதான் எல்லா விடுதலைக்கும் முன்நிபந்தனை என ஏன் இடம்மாற்ற முடியாது. இந்த ஒடுக்குமுறைகளை புறம்தள்ளி தலித் விடுதலை மட்டும்தான் முன்நிபந்தனை என எழுதுவது எப்படி பன்முகத்தன்மை வாய்ந்த (பின்நவீனத்துவப்) பார்வையாக இருக்க முடியும்? எனவே கோட்பாட்டு ரீதியில் தலித் மேம்பாட்டு முன்னணி தன்னை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
இந்த அமைப்பின் பெயர்கூட “இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி” என்ற அடிப்படையில் இலங்கையிலுள்ள தலித்துகளினது மேம்பாட்டுக்கான செயற்திட்டங்களை அது கொண்டிருக்கும் என ஒருவர் எதிர்பார்க்க முடியும். அதை முதல் மாநாட்டில் நண்பர் தேவதாசன் வலியுறுத்தியதாகவும் ஞாபகம் இருக்கிறது. மேம்பாட்டுத் திட்டங்கள் சம்பந்தமாக இந்த இரண்டாவது மாநாடு கரிசனை கொள்ளும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் அதன் நிகழ்ச்சி நிரலில் இதைக் காணவில்லை. சோபாசக்தி சொல்வதுபோன்று கருத்தியல் களத்தில் செயற்படுவதுதான் என்றால் இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி என்பதில் இலங்கை, மேம்பாடு என்ற சொற்கள் பெயர்ப் பலகையாக மாறிவிடும். தலித் மாநாடாகவன்றி தலித்திய மாநாடாக - கூடிக்கலையும் மாநாடாக - மாறிவிடும்.
முதல் மாநாடு நடந்து 4 மாத காலத்துள் இரண்டாவது மாநாட்டை நடத்தும் அவசரம் ஏன் வந்தது என்று புரியவில்லை. மாநாட்டுச் செலவு இலங்கைத் தலித்துகளின் மேம்பாட்டுத் திட்டத்தை அமுக்கிவிடும் படியாக அமைந்துவிடுமானால் அதைவிட பரிதாபமானது எதுவுமில்லை. இலக்கியச் சந்திப்பைப் பிரதிபண்ணி தலித் மேம்பாட்டு முன்னணியும் செயற்படப் போகிறதா? என்ற கேள்வியை அதன் நிகழ்ச்சி நிரல் எழுப்பியுள்ளது. மாநாட்டுக்கு வாரீர் என்று வருந்தியழைக்கும் நிலைக்கு இந்த மாநாடுகளை அலையவிடாமல் பார்க்கும் கடப்பாடு தலித் முன்னணியினரின் கையில்தான் இருக்கிறது. இந்த மாநாடுகளை ஒழுங்கு செய்பவர்களெல்லாம் தற்காலிக தலித் முன்னணி உறுப்பினர்களாக தோன்றி மறைந்தால் அது எடுப்பார் கைப் பிள்ளையாகிவிடும் அவலம்தான் மிஞ்சும். -ரவி//
மேலும் கொழும்பில் இருந்து முத்து என்பவர் பின் வருமாறு எழுதுகிறார்,
//இலண்டன் தலித் மாநாட்டில் உரைவீச்சு நிகழ்த்த அழைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களைச் சற்றுக் கவனியுங்கள். தோழர் ந. இரவீந்திரன் இலங்கையிலுள்ள குறிப்பிடக் கூடிய மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர் புதிய ஜனநாயக் கட்சியில் இயங்குபவர்இ தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாட்டாளர்.//
- சொன்னவர் சோபா சக்தி
சோபாசக்தியின் மேற்கண்ட விபரிப்பை வாசித்தபோது நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டேன். காரணம் தோழர் ரவீந்திரன் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மார்க்ச்சிய சிந்தனையோடு தன் செயல்பாட்டை வழங்குபவர். இவர் எப்படி மார்க்ச்சிய விரோத தலித் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமென்று ஒரே குழப்பமாக எனக்கு இருந்தது.
நேற்று இதுபற்றி விசாரித்தபோது தோழர் ரவீந்திரன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்து இரண்டுவாரமாகி விட்டதென்றும் இச்செய்தி தலித் முண்ணணிக்கு தெரியுமென்றும் அறிந்தேன். அப்படியிருக்க ஏன் இவ்வாறு இவர்கள் பொய்சொல்லி விளம்பரப்படுத்த வேண்டும்? இவர்கள் புலிகளைவிட மோசமானவாகளாக இருக்கிறார்கள். புலிகள்தான் தங்களின் கூட்டத்திற்கு அவர் வருவார் இவர் வருவார் என்று புலுடாவிட்டு ஆள்சேர்ப்பார்கள். இங்கேயும் அதேபாணி. பழக்கதோசம் யாரைத்தான் விட்டது!
ரகு on February 16, 2008 5:08 am
//..‘நாங்கள் தலித்துகளிற்கு விடுதலை பெற்றுக் கொடுத்து விடுவோம், அதற்கான வேலைத் திட்டம் எங்கள் கையிலிருக்கிறது’ என்றெல்லாம் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியோ அதன் ஆதரவாளர்களோ ஒருபோதும் சொன்னதில்லை….// ஷோபாசக்தி 13.02.2008
//..தமது இயக்கத்திற்கான அரசியற் பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து விடுதலைப் புலிகளிடம் தமிழ் மக்கள் நலன்கள் சார்ந்த வேறெந்த வேலைத்திட்டமும் கிடையாது. …….அறங்களையும் தகுதிகளையும் இழந்திருக்கும் புலிகள் சாதிய ஒடுக்குமுறைகளிற்கான தீர்வைத் தருவார்கள் எனச் சொல்வது பிராந்திய வல்லரசான இந்தியா ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டிவிடும் எனச் சொல்லும் அறியாமைக்கு அல்லது அயோக்கியத்தனத்திற்கு ஒப்பானது. …//
ஒக்ரோபர் 21 எழுச்சியின் நாற்பதாவது வருட நினைவுகளும் பாடங்களும் - ஷோபாசக்தி————————–
மேலே உள்ள இரண்டும் சோபாவின் எழுத்துத்தான். ஒப்பிட்டு பாருங்கள்
Saturday, 16 February 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment