Sunday, 10 February 2008

வேத காலத்துக்கு முற்பட்ட இந்தியாவில் திராவிடம்

வேதங்களின் சமஸ்கிரத மொழியில் திராவிட மொழிச் செல்வாக்கு இருப்பதை நீண்ட காலமாக அறிஞர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.ரிக் வேததில் குறைவாகவும் அதன் பின் எழுந்த நூல்களில் கூடுதலாகவும் இச் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்து காணப்படுவதையும் வரலாற்று மொழியிலாளர் காட்டியுள்ளனர்.வேத நூல்களுக்குப் பிற்பட்ட நூல்களில் சமஸ்கிரத மொழியின் பல்வேறு கூறுகளில் இச் செல்வாக்கு காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.சமஸ்கிரதம் பேசாத மக்கள் மத்தியில் வட மேற்கில் இருந்து சமஸ்கிரத மொழி பரவிய போது, அம் மக்கள் மொழிகளில் இருந்து கூடுதலாகத் திராவிடச் சொற்களை சமஸ்கிரத மொழி பெற்றமைக்கு இது சான்றாகும் என மொழியிலாளர் கருதுவர்.இத் துறையில் மிகுந்த ஆர்வங் கொண்டு ஆய்வு நடாத்திய மொழியியலாளராகிய பேராசிரியர் தொமஸ் பரோ என்ற ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் வேத நூல்களுக்குப் பிற்பட்ட சமஸ்கிரத நூல்களில் குறிப்பிடத் தக்க திராவிடச் சொற்கள் இருப்பதைக் காட்டி ,திராவிட மொழி பேசியோருடைய செல்வாக்குக் காலஞ் செல்லச் செல்ல வளர்ந்து சென்றதை வலியுறுத்தி உள்ளார்.இத்தகைய சான்று காட்டி நிற்பது என்ன? சமஸ்கிரதம் பிற இந்து ஆரிய மொழிகளும் வட இந்தியாவில் பரவிய போது அங்கு எலவே திராவிட மொழி பேசுவோர் குடியிருந்தனர் என்பது இச் சான்றுகளால் வெளிப்படுகிறது. மொழியிலாளருடைய கருதுக்களில் அடிப்படையில் இதனை விளக்கிய பேராசிரியர் தாபர், வேத சமஸ்கிரதத்தில் விவசாயாம் தொடர்பான இந்து -ஆரியம் அல்லாத சொற்கள் இருப்பதைக் குறிபிட்டுள்ளார்.வட இந்தியாவில் முன்னர் குடியேறிய மக்கள் மத்தியில் படிப்படியாக சமஸ்கிருதம் பரவியதன் விளைவாய் பொ.ஆ முதலாம் ஆயிரவாண்டு தொடங்கு முன்னரே (இற்றைக்கு 2000 ஆண்டுக்களுக்கு முன் ) இந்து ஆரியப் பிராகிருதங்கள் எனப்பட்ட மொழிகள் அம் மக்களின் தாய் மொழிகளாகி முன்பு பேசப்பட்ட பழைய மொழிகளுக்குப் பதிலாக வட இந்தியாவின் முக்கிய மொழிகள் ஆகின.இவ்வாறு முக்கியமான தாய்மொழி மாற்றப்போக்கு ஏற்பட்டதனால் பெரும்பாலான வட இந்தியத் திராவிட மொழிகளும் பிற மொழிகளும் அழிந்து போயின.ஒரு சில ஒதுக்கிடங்களில் சமஸ்கிரத மயமாக்கத்துக்கு இலக்காகாமல் திராவிட மொழிகள் சில இன்று வரை தப்பி உள்ளன.ஏனைய வட இந்தியப் பகுதிகளில் பிராகிருதங்களின் வழித் தோன்றல்களாக இன்றைய வட இந்திய மொழிகள் ( நவீன இந்து ஆரிய மொழிகள்) தோன்றின.

இதுவரை கூறியதன் அடிப்படையில் நாம் கண்டு கொள்ளக் கூடியது என்ன எனில்,இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிரதமும் பிற இந்து ஆரிய மொழிகளும் வடமேற்கிந்தியா வழியாகப் பரவத் தொடங்கிய போது, திராவிட மொழிகளும் ஆஸ்திரோ ஆசிய மொழிகளும் வேறு பிற மொழிகளும் வட இந்தியாவில் பேசப்பட்டன என்பதாகும்.தெனிந்தியாவில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி ஓர் இலக்கிய மொழியாக வளம் பெற்றிருந்ததால் ,அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திராவிட மொழிகள் தெனிந்தியாவில் பரவியிருந்தன எனலாம்.

இலங்கையில் தமிழர்- ஓர் இனக் குழு ஆக்கம் பெற்ற வரலாறு - (பக்கம் 157-158)

பேராசிரியர்.கா.இந்திரபாலா,

2 comments:

அருண் said...

இது பதிவு அல்ல. வரலாற்றுப் பதிவு. இவ்வாறான பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டியன.

நன்றி

அற்புதன் said...

அருண் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.பதிவைப் படிப்பவர்கள் ஒரு வரியாவது எழுதினால் தான் இப்படியான பதிவுகளும் தமிழ்மணத்தில் படிக்கப் படுகின்றன என்னும் நம்பிக்கை பிறந்து தொடர்ந்து எதாவது இதேபோல் பதிவிட ஊக்கம் பிறக்கிறது.